புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!

கூடங்குளம் அணுஉலை விவகாரம்: தமிழக மக்கள் அறியவேண்டிய உண்மைகள்!


கூடங்குளம் அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களையும், உதயகுமார் உள்ளிட்ட வழிநடத்தும் மக்கள் போராளிகளையும் தேசத்துரோகிகளாகவும், தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்தடைக்கு இவர்கள்தான் காரணம் எனவும், இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டால் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் எனவும், அதன்பிறகு கூடங்குளத்தில் பணிகள் தொடங்கப்பட்டு தமிழகமே மின்வெட்டு இருளிலிருந்து மீண்டுவிடும் என்பதுபோலவும் ஒரு "மூட நம்பிக்கை' நிலவிக் கொண்டிருக்கிறது.


அனைவரும் ஓர் உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். தமிழகத்தில் தற்போது நிலவிவரும் மின்வெட்டுக்கும், கூடங்குளம் போராட்டங்களுக்கு துளியும் தொடர்பு இல்லை. இது இந்திரா காந்தி, எம்.ஜி.ஆர். காலத்திலிருந்தே சிறிதும் பெரிதுமாக நடைபெற்று வரும் ஒரு நெடிய போராட்டமாகும். கடந்த ஒரு வருடமாக இப்போராட்டம் மக்கள் எழுச்சிமிகு தொடர் போராட்டமாக மாறியிருக்கிறது. அதற்கு என்ன காரணம்?




வாழ்வுரிமை
கூடங்குளம் அணுஉலையிலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திற்குள் 35 ஆயிரம் மக்களும், 5 கி.மீ. சுற்றளவுக்குள் ஒரு லட்சம் மக்களும் வாழ்கிறார்கள். அம்மக்களின் வாழ்வுரிமைப் போராட்டம் என்பது தென்தமிழகம், கேரளா மற்றும் அண்டை நாடான இலங்கை உள்ளிட்ட பகுதிகளில் வாழும் கோடிக்கணக்கான மக்களின் உயிர் பாதுகாப்பு தொடர்பானது என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
நாம் வசிக்கும் ஊருக்கு அருகில் அணுஉலை அமைக்கப்பட்டால், அதன் ஆபத்துகளை அறிந்தபிறகு அதை நாம் அனுமதிப்போமா? எதிர்ப்போமா? என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும்

.
ஜப்பானும் இந்தியாவும்
ஜப்பானில் கடந்த 11.03.2011 அன்று ஏற்பட்ட பூகம்பத்தில் "புகுஷிமா அணுஉலை' பாதிக்கப்பட்டு கதிர்வீச்சு பரவியது. அறிவியல் தொழில்நுட்பத்தில் உயர்ந்த இடத்தில் இருக்கும் ஜப்பானாலேயே இதைத் தடுக்க முடியவில்லை. சுமார் 20 ஆயிரம் ஜப்பானியர்கள் இறந்திருக்கலாம் என்றும், அதை ஜப்பானிய அரசு மறைப்பதாகவும் சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டுகின்றன.
அணுஉலை கசிவை, விபத்தை ஜப்பான் போன்ற வளர்ந்த - வல்லமை மிக்க நாடுகளாலேயே தடுக்க முடியவில்லை எனில், இந்தியா போன்ற தேசங்களால் என்ன செய்ய முடியும்? தானே புயலால் ஏற்பட்ட சேதத்திற்கு முதலுதவி செய்யவே நமக்கு ஒரு வாரம் தேவைப்படுகிறது. அணுஉலை வெடித்தால், நமது அரசின் மீட்பு நிலை எப்படி இருக்கும் என்பதை மனசாட்சியோடு சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


 
14000 கோடியா? உயிர்களா?
14000 கோடிகளை முதலீடு செய்து அணுஉலை கட்டிய பிறகு இப்போது அதை எதிர்ப்பது நியாயமா? என சிலர் கேட்கிறார்கள். இந்த அணுஉலை அமைக்கப்பட்ட 1980களில் இதுகுறித்த விழிப்புணர்வு யாருக்கும் இல்லை. நம் பகுதிகளில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகப் போகிறது, நமக்கெல்லாம் வேலைகளும், சலுகைகளும் கிடைக்கப் போகிறது என அரசின் ஏமாற்று பிரச்சாரங்களை அம்மக்கள் நம்பியிருந்தனர்.
இதுகுறித்து உதயகுமார் உள்ளிட்ட பலர் அப்போது எச்சரிக்கை துண்டுப் பிரசுரங்களை வினியோகித்தபோது அதை அம்மக்கள் எதிர்த்தனர். ஜப்பான் - புகுஷிமா அணுஉலை விபத்துக்குப் பிறகே அப்பகுதி மக்கள் தங்களுக்கு நேரப்போகும் அபாயங்களை உணர்ந்தனர். அதன்பிறகே கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டங்களை மக்கள் நடத்திவருகின்றனர். உதயகுமார், புஷ்பராயன், ஏசுராஜ் போன்ற வழிநடத்தும் போராளிகளே தடுத்தாலும், அம்மக்கள் போராட்டங்களை கைவிடப் போவதில்லை என்பதே உண்மை. 14000 கோடி ரூபாய் வீணாகிறதே... என கவலைப்படும் "நல்லவர்கள் - தேசபக்தர்கள்' ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் மகளுக்கு ஒரு மணமகனை நிச்சயம் செய்து, திருமணம் ஓராண்டுக்குப் பிறகு நடத்தப்படும் என முடிவெடுக்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம். திருமணம் நெருங்கும் தருணத்தில், மணமகனுக்கு எய்ட்ஸ் நோய் இருப்பதாகத் தெரியவருகிறது. அப்போது நிச்சயத்தை காரணம் காட்டி திருமணத்தை நடத்துவீர்களா? அல்லது ரத்து செய்வீர்களா? இதற்கு நீங்கள் தரும் பதில்தான் கூடங்குளம் போராட்டக்காரர்களின் கேள்விகளுக்கும் பொருந்தும்.


அணுஉலை மூலம் அதிக மின்சாரம் கிடைக்குமா?
இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள மின் நிலையங்களில் நிலக்கரி, வாயு, எண்ணெய் போன்றவற்றை உள்ளடக்கிய அனல்மின் நிலையங்களிலிருந்து 65.10 சதவீதமும், புனல்மின் நிலையங்களிலிருந்து 21.22 சதவீதமும், சூரிய ஒளி, காற்றாலை போன்றவற்றிலிருந்து 11.05 சதவீதமும் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. அதேசமயம், அணுஉலைகளி-ருந்து மொத்தமே 2.36 சதவீத மின்சாரத்தை மட்டுமே பெறப்படுகிறது.
கூடங்குளத்தில் அணுஉலை இயக்கப்பட்டால் மொத்தமாக 15 நிமிடங்களுக்குத் தேவையான மின்சாரம் மட்டுமே கிடைக்கும். இந்த உண்மைகளை மத்திய மாநில அரசுகள் மறைக்கின்றன.
மின்சார உற்பத்தியைப் பெருக்க அணுஉலைகளுக்கு பதிலாக கடல் அலை, நதிகள், அருவிகள், காற்றாலை, சூரிய ஒளி ஆகிய இயற்கை துறைகளிலிருந்தும் - தொழில்நுட்பங்களிலிருந்தும் தயாரிக்க முடியும். அதை அரசு ஏன் செய்ய மறுக்கிறது?
அறிவியல் தொழில்நுட்பத் துறையில் வளர்ந்த நாடுகளான ஜெர்மனி போன்ற பல நாடுகள் கூடங்குளத்தில் இருப்பது போன்ற அணுஉலைகளை தங்கள் நாட்டில் அனுமதிப்பதில்லை. அமெரிக்காவும், ஜப்பானும் புதிதாக அணுஉலைகளை தங்கள் நாடுகளில் நிறுவ தடை விதித்துவிட்டன.
உலக யுரேனியத்தில் 23 சதவீதத்தை தன்னகத்தே வைத்திருக்கும் ஆஸ்திரேலியா, தனது நாட்டில் இதுவரை ஒரு அணுஉலையைக் கூட கட்டவில்லை.
தற்போது ரஷ்யாவின் துணையோடு கூடங்குளத்தில் அமைந்துள்ள அணுஉலை என்பது வி.வி.ஐ.ஆர். வகையைச் சார்ந்ததாகும். இந்த வகை அணுஉலைகள் கடற்கரைப் பகுதிகளில் இதுவரை அமைக்கப்பட்டதில்லை. ரஷ்ய பொறியாளர்களுக்கு இதில் முன் அனுபவமும் இல்லை. அதைவிட கவனிக்கத்தக்கது, இந்த வகை அணுஉலைகளின் குளிர்விக்கும் கலன்கள் முதல்முறையாக கடல்நீரைக் கொண்டு பரிசோதிக்க இருக்கின்றன.
நாம் கேட்பது என்னவெனில், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்ட மக்கள் என்ன, பரிசோதனை எலிகளா? உலகிலேயே இவர்கள்தான் ஊருக்கு இளைத்தவர்களா?
ஜப்பானில் புகுஷிமா அணுஉலை விபத்து நடந்தபிறகு, ரஷ்ய அணுஉலைகளின் தரத்தை ஆராய ஒரு குழுவை அமைத்தார் ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி மெத்வதேவ். அக்குழு, "சக்திவாய்ந்த புகுஷிமா ஜப்பானிய அணுஉலை விபத்துகளைத் தாக்குப்பிடிக்கும் அளவுக்கான வலிமை ரஷ்ய அணுஉலைகளுக்கு இல்லை' என அறிக்கை சமர்ப்பித்து விட்டது.
ரஷ்யாவில் "செர்னோபிலில்' தான் 1986 ஜூன் மாதத்தில் கதிர்வீச்சு வெளியேறி 30 கிலோ மீட்டர் சுற்றளவில் வாழ்ந்த மக்கள் பாதிக்கப்பட்டார்கள். இதில் 9 முதல் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்ததாக கூறப்பட்டது. இது ஹிரோஷிமா, நாகசாகியில் அமெரிக்கா வீசிய அணுகுண்டுகளை விட நூறு மடங்கு ஆபத்துகளை ஏற்படுத்தியது.
ரஷ்யாவின் துணையோடு அமைக்கப்பட்டுள்ள கூடங்குளம் அணுஉலைகள், புயல், சுனாமி, பூகம்பம் ஏற்படும் வாய்ப்புள்ள புவிக்கோட்டில் அமைந்துள்ளதை நினைவில் கொள்ளவேண்டும்.



தேசத்துரோகிகள் யார்?
கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த அணுஉலைகள் முதலில் கேரளாவில்தான் அமைக்க திட்டமிடப்பட்டன. கேரள அரசும், மக்களும் விழித்துக் கொண்டதால் அது தமிழகத்தின் தலையில் கட்டப்பட்டுள்ளது.
"அணுஉலைகளை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம்' என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துவிட்டார்.
மலையாளிகளுக்கும், வங்காளிகளுக்கும் உள்ள சமூகப் பொறுப்புணர்வு தமிழர்களுக்கு இல்லையா? உதயகுமார் போன்றவர்கள் தேசத்துரோகிகள் என்றால் கேரள, மேற்குவங்க அரசியல் தலைவர்கள் எல்லாம் யார்?
அமெரிக்கா - ரஷ்யாவின் செல்லப் பிள்ளைகளான மன்மோகன் சிங்கும், மான்டேக் சிங் அலுவாலியாகவும் யார்? மக்களுக்காகப் போராடும் உண்மையான தலைவர்களை எதிர்கால வரலாறு விளக்கத்தான் போகிறது.
அனைவரும் மதிக்கும் அப்துல் கலாம், கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறாரே...? எனலாம்.
அப்துல் கலாம் ஒரு அரசாங்க பிரதிநிதி. அவர் ஒரு ஏவுகணை விஞ்ஞானி தானே தவிர அணு விஞ்ஞானி அல்ல. அவரை நாமும் மதிக்கிறோம். ஆனால் தினமும் இலங்கை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்படும் தமிழக மீனவர்களுக்காகவோ, தீண்டாமையால் அவதிப்படும் தலித்துகளுக்காகவோ, கலவரங்களால் பாதிக்கப்படும் சிறுபான்மையினர்களுக்காகவோ என்றைக்காவது ஐயா அப்துல் கலாம் குரல் கொடுத்திருக்கிறாரா? என்பதையும் கேள்விகளாக முன்வைக்கிறோம்.
காந்தியின் அகிம்சை வழிப் போராட்டத்தை வரவேற்றவர்கள் கூட நேதாஜியின் நியாயங்களையும் ஏற்றார்கள் என்பதை "அறிவுஜீவிகள்' புரிந்துகொள்ள வேண்டும்.
அப்துல் கலாம் அவர்கள் இவ்விஷயத்தில் மக்களின் பக்கம் நிற்காமல் அரசு பக்கம் நிற்பது துரதிர்ஷ்டவசமானது, வருந்தத்தக்கது.


அணுமின் நிலையங்களின் உண்மை நிலை
இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட அணுஉலைகள் எதுவும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை எட்டவில்லை. அவற்றைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும்தான் செலவுகள் பன்மடங்காகின்றன.
இன்னும் பல புதிய அணுஉலைகளைக் கட்டினாலும், 2050ல் கூட அணுஉலைகளின் மூலம் 5 சதவீத மின்தேவையைக் கூட எட்ட முடியாது என்பதே உண்மை.
உண்மையில் அணுஉலைகளில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறதா? அல்லது மின்சாரம் என்ற பெயரில் அணுகுண்டுகள் தயாரிக்கப்படுகிறதா? என்பதை அரசுதான் விளக்க வேண்டும்.


மக்களே... சிந்திப்பீர்...
அணுஉலைகளில் கசிவு என்பது தவிர்க்கவே முடியாததாகும். அவற்றின் கழிவுகளைப் பாதுகாப்பதும், பராமரிப்பதும் அவ்வளவு எளிதல்ல. அது சேதமடைந்தால் அணுகுண்டுகளினால் ஏற்படும் பேராபத்தை விட மோசமாக இருக்கும்.
அப்பகுதிகளில் கடல்நீர் பாதிக்கப்பட்டு மீன் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் அழியும். உணவு, குடிநீர், காற்று மாசுபடும். சுற்றுச்சூழல் கெடும். புற்றுநோய் பரவுவது தவிர்க்க முடியாதது என்றெல்லாம் உலக அனுபவங்கள் கூறுகின்றன. விஞ்ஞானிகளும் எச்சரிக்கிறார்கள்.
1984ல் மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் "யூனியன் கார்பைட்' என்ற அமெரிக்க நிறுவனத்தில் விஷவாயு கசிந்ததில் ஆயிரக்கணக்கானோர் இறந்ததையும், இன்றுவரை அங்கு குழந்தைகள் ஊனமுற்றும், புற்றுநோயோடும் பிறப்பதையும் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையான இழப்பீடுகள் இல்லை. இந்திய அரசு நம் மக்களை மறந்துவிட்டு, அமெரிக்க கம்பெனிக்கு ஆதரவாக இன்றுவரை செயல்படுவதைப் பார்த்தபிறகும், நீங்கள் கூடங்குளம் போராட்டத்தை எதிர்த்தால் அது உங்கள் மனசாட்சியைக் கொல்வதாகவே இருக்கும்.
நமக்கு மின்சாரம் வேண்டும்! ஆனால் மக்களை அழித்து சுடுகாட்டில் விளக்குகள் எரியவேண்டாம்!

வெளியீடு
மனிதநேய மக்கள் கட்சி.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

நோன்பும், அல் குர்ஆனும்

நோன்பும், அல் குர்ஆனும் 


ரமலான் மாதம் குர்ஆன் அருளப்பட்ட மாதம்:
‘ரமழான் மாதம் எத்தகையது என்றால் மனிதர்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய, சத்தியத்தை அசத்தியத்தை பிரித்துக் காட்டும் அல் குர்ஆன் அருளப் பெற்றது, உங்களில் எவர் அம்மாதத்தை அடைவாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்கட்டும்’ (அல்பகரா 2: 185).

அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
குர்ஆனை ஓதுங்கள். திண்ணமாக தன்னை ஓதக்கூடியவர்களுக்கு மறுமை நாளில் அது பரிந்துரை செய்யக் கூடியதாக வரும். (முஸ்லிம்)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
குர்ஆனை திறமையாகக்கற்றுத்தேர்ந்தவர், நல்ல கண்ணியமிக்க எழுத்தர் (மலக்கு) களுடன் இருப்பார். எவர் குர்ஆனை திக்கித் திக்கி ஓதுகின்றாரோ, மேலும் அவருக்கு அது கடினமாகவும் இருக்கின்றதோ அவருக்கு இரட்டைக் கூலி உண்டு.
(புகாரி, முஸ்லிம்).
ஒரு கூலி ஓதியதற்காக. மற்றொன்று சிரமத்துடன் அதை ஓதியதற்காக.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
எவர் குர்ஆனிலிருந்து ஒரே ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ அதற்காக அவருக்கு ஒரு நன்மை கிடைக்கின்றது. அந்த ஒரு நன்மை அதைப் போன்று பத்து நன்மைகளாக அதிகரிக்கப்படுகின்றது. அலிஃப்- லாம்-மீம் என்பதை நான் ஒரு எழுத்து என்று சொல்ல மாட்டேன். ஆனால் அலிஃப் ஒரு எழுத்து. லாம் ஒரு எழுத்து. மீம் ஒரு எழுத்து|.(திர்மிதி)

‘நோன்பும், அல் குர்ஆனும், மறுமையில் ஓர் அடியானுக்காக பரிந்து பேசும். நோன்பு கூறும், ‘நான் இவ்வடியானை உணவை விட்டும், இச்சைகளை விட்டும் தடுத்திருந்தேன் இவன் விஷயத்தில் பரிந்துரைப்பாயாக’! அல் குர்ஆன் கூறும் ‘நான் இவனை இரவில் தூங்கவிடாமல் தடுத்திருந்தேன் எனவே இவனுக்கு பரிந்துரை செய்வாயாக’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அஹ்மத்).

‘ரமழானின் ஒவ்வொரு இரவிலும் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களை சந்தித்து குர்ஆனை ஓதிக்காட்டுவார்கள்’ (புஹாரி).



இச்செய்திகள் குர்ஆனுக்கும் ரமழானுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பை தெளிவுபடுத்துகிறது. குர்ஆனுடனான தொடர்பை குறைத்துக்கொண்ட அதிகமான முஸ்லிம்கள் இச் சந்தர்ப்பத்திலிருந்தாவது குர்ஆனை படிப்பதன் மூலம், அதனை ஆராய்வதன் மூலம், அதன் வழி நடப்பதன் மூலம், வாழ்க்கையின் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதை தீர்வாக ஆக்கிக் கொள்வதன் மூலம் அதன் பக்கம் நெருக்கத்தை அதிகப்படித்துக் கொள்வதற்கு முன்வரவேண்டும்.

சனி, 10 மார்ச், 2012

ஸலவாத்துன்னாரிய்யா


ஸலவாத்துன்னாரிய்யா

Post image for ஸலவாத்துன்னாரிய்யா
நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடம் அருமை ஸஹாபாக்கள் உங்களுக்கு நாங்கள் எப்படி ஸலவாத் கூறுவதுஎன்று கேட்டபோது, நபி அவர்கள் ஸலவாத்கூறும் முறைகளை நமக்குத் தெளிவாக கற்றுத் தந்துள்ளனர். அவர்கள் எவற்றை ஸலவாத்என்று கற்றுத் தந்தார்களோ அதை விடுத்து நாமாகப் புதிய ஸலவாத்களை உருவாக்கிக் கொண்டால் அது ஸலவாத் ஆக முடியாது. மாறாக பித்அத்ஆக அவை கருதப்படும். இதற்கு உதாரணமாக இப்னு அபீ ஜைதுஎன்ற அறிஞர் வர்ஹம் முஹம்மதன் வஆல முஹம்மத்என்று ஒரு புதிய ஸலவாத்தை அவராக தயாரித்தபோது அன்றைய அறிஞர் உலகம் அவரை வன்மையாகக் கண்டித்து அவர் மார்க்கத்தை அறியாதவர்என்றும் முடிவு கட்டியது.
நபி அவர்கள் ஸலவாத் எப்படிக் கூறுவது என்று நமக்கு தெளிவாக கூறியிருக்கும் போது புதிதாக ஒரு ஸலவாத்தை உருவாக்குவது பித்அத் ஆகும்என்றும் அன்றைய அறிஞர் பெருமக்கள் அவரைக் கண்டித்துள்ளனர். திர்மிதிஎன்ற ஹதீஸ் நூலுக்கு விரிவுரை எழுதிய இமாம் அபூபக்ரு இப்னுல் அரபி(ரஹ்) அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் இதனைக் குறிப்பிடுகிறார்கள். இந்த அடிப்படையை நாம் புரிந்து கொண்ட பின் ஸலவாத்துன்னாரிய்யாஎன்று நம்மவரிடையே பிரபல்யம் அடைந்துள்ள ஸலவாத்தை அலசுவோம்.
இந்த ஸலவாத்துன்னாரியாஎன்ற ஸலவாத்தை நபி அவர்கள் நமக்குக் கற்றுத்தரவில்லை. அருமை ஸஹாபாக்கள் இதை ஓதியதுமில்லை. நாற்பெரும் இமாம்களின் காலத்திலும் இந்த ஸலவாத் இருந்ததில்லை.
மிகமிகப் பிற்காலத்தில் வாழ்ந்தவர்கள் தான் இந்த ஸலவாத்தைத் தயார் செய்தனர். நபி அவர்கள் கற்றுத்தந்துள்ள எண்ணற்ற ஸலவாத்துக்கள் இருக்க, இப்படிப் பிற்காலத்தில் சிலரால் உருவாக்கப்பட்ட ஸலவாத்துன்னாரியாமக்களிடம் நன்கு அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இதைச் சொல்வதால் ஸலவாத்தின் நன்மை நிச்சயம் கிடைக்காது. இதன் பின்னனியில் ஏராளமான பித்அத்கள் வேறு நடந்து கொண்டுள்ளன. இதை 4444 தடவை ஓத வேண்டுமாம். இந்த எண்ணிக்கை நிர்ணயம் செய்தவர் யார்? அல்லாஹ்வுக்கும் அவனது தூதர் அவர்களுக்கும் தவிர இப்படி எண்ணிக்கைணை நிர்ணயிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.
இந்த ஸலவாத்ஓதுவதால் செல்வம் பெருகும் நோய் நீங்கும் என்ற குருட்டு நம்பிக்கை வேறு! இந்த தீனைவைத்து சம்பாதிப்பவர்கள் தான் திட்டமிட்டு உருவாக்கினார்கள் என்பதை சிந்தனை உள்ள எவரும் உணரலாம். 4444 என்று பெரும் எண்ணிக்கைணைச் சொன்னால் மக்கள் தானாக அவ்வளவு பெரும் எண்ணிக்கையை ஓத இயலாது. அதற்கென்று ஓதத் தெரிந்தவர்கள் அழைப்பார்கள் அதற்கு சில்லரைகள் கிடைக்கும் என்ற நோக்கத்தைத் தவிர வேறு நோக்கம் எதுவும் இருக்க முடியாது.
இத்தகைய பித்அத்தான சொற்றொடர்களைச் சொல்வதால் நன்மை கிடைப்பதற்கு பதிலாக தீமைதான் ஏற்படும். ஏனெனில் நபி அவர்கள் எல்லா பித்அத்களும் வழிகேடு என்று சொல்லி இருக்கின்றார்கள். (புகாரி)
இவை எல்லாவற்றுக்கும் மேலாக ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருளும் குர்ஆன், ஹதீதுகளின் வழிகாட்டுதலுக்கு முரண்படுகின்றது.
கிறித்தவர்கள் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை நீங்கள் வரம்பு மீறிப் புகழாதீர்கள். (நூல்கள்: புகாரி, தாரமி, அஹ்மத், ஷமாயிலெ திர்மிதீ) என்ற நபி அவர்களின் எச்சரிக்கைக்கு மாற்றமாகவே இதன் பொருள் அமைந்துள்ளது.
இனி ஸலவாத்துன்னாரியாவின் பொருளை பார்ப்போம்

யா அல்லாஹ்! எவர் மூலம் சிக்கல்கள் அவிழ்ந்து விடுமோ; எவர் மூலம் கஷ்டங்கள்   அகன்று விடுமோ; எவர் மூலம் தேவைகள் நிறைவு செய்யப்படுமோ; எவர் மூலம் ஆசைகள்   பூர்த்தி செய்யப் படுமோ; எவருடைய திருமுகத்தின் மூலம் மேகத்திலிருந்து மழை   பெறப்படுமோ அந்த எங்கள் தலைவர் மீது முழுமையாக நீ அருள் புரிவாயாக!இது தான்   ஸலவாத்துன்னாரிய்யாவின் பொருள்.
அல்குர்ஆனையும் நபி மொழிகளையும் ஓரளவு அறிந்தவர்கள் கூட இந்தப் பொருளை ஏற்க மாட்டார்கள்! இதில் சொல்லப்படுகின்ற தன்மைகள் யாவும் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரித்தானது என்று கூறிடுவார்கள்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்கள் மூலம் கஷ்டங்கள் அகன்று விடும்என்று அல்லாஹ்வோ, அவன் திருத் தூதரோ நமக்குச் சொல்லித் தரவில்லை. அல்லாஹ்வின் மூலமாகவே கஷ்டங்கள் விலக முடியும்என்று தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் போதனை செய்தார்கள்.
அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே நான் நன்மை செய்து கொள்ளவோ தீங்கிழைத்துக் கொள்ளவோ சக்தி பெற்றிருக்கவில்லைஎன்று சொல்வீராக! (அல்குர்ஆன் 10 :49)
அல்லாஹ் இப்படித்தான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களை கூறச் சொல்கிறான். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களும் அவ்வாறே கூறினார்கள். நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களின் 23 ஆண்டு கால பிரச்சசார வாழ்க்கையில் அவர்கள் பட்ட கஷ்டங்களே இதற்குச் சரியான சான்றுகளாகும். எத்தனை முறை அடிக்கப்பட்டிருக்கிறார்கள்? பைத்தியம் என்று எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள்! தாயிப்நகரில் இரத்தம் சிந்தும் அளவுக்கு கல்லால் அடிக்கப்பட்டார்கள்! சொந்த ஊரிலேயே இருக்க முடியாத நிலமைக்கு ஆளாக்கப்பட்டார்கள்! உஹதுப் போர்க் களத்தில் பல்உடைக்கப்பட்டது! இது போன்ற இன்னும் பல கஷ்டங்களுக்கு அவர்களே ஆளானார்கள்.
அவர்களின் அன்புத் தோழர்களில் பலர் இரண்டாகக் கிழிக்கப்பட்டார்கள்! சுடு மணலில் கிடத்தப்பட்டார்கள்! மர்ம ஸ்தானத்தில் அம்பு எய்து கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள்! தூக்கு மேடையிலும் ஏற்றப்பட்டார்கள்! பல போர்க்களங்களில் ஷஹீதாக்கப்பட்டார்கள்! நபி(ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம்) அவர்களின் காலத்திலேயே இவ்வளவு கொடுமைகளும் தொடர்ந்தன. இது போன்ற சந்தர்ப்பங்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இ தன் மூலமாகக் கஷ்டங்கள் விலகும்என்று கூறிடவில்லை.
தனது பெரிய தந்தை இஸ்லாத்தை ஏற்க வேண்டும்என்ற ஆசை நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. ஆனால் கடைசி வரை அந்த ஆசை பூர்த்தி செய்யப்படவில்லை ஏன் அபூஜஹல் உட்பட எல்லாக் காபிர்களும் இஸ்லாத்தில் இணைய வேண்டும் என்ற பேராசையும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களுக்கு இருந்தது. அதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான். அவர்கள் இந்த (வேத) அறிவிப்பில் ஈமான் கொள்ளவில்லை என்பதற்காக கை சேதப்பட்டு உன்னையே நீர் அழித்துக் கொள்வீர் போலும்’ (அல்குர்ஆன் 18:6) என்று அல்லாஹ் சொல்லிக் காட்டும் அளவுக்கு காபிர்கள் ஈமான் கொள்ள வேண்டும் என்று பேராசை கொண்டிருந்தார்கள். அந்த ஆசையை அல்லாஹ் நிறைவேற்றித் தரவில்லை.
அவர்களின் 23 ஆண்டுகால வாழ்க்கையில் துன்பங்கள் தான் இன்பங்களை விடவும் அதிகமாக இருந்தன. தாங்களே கஷ்டத்திற்கு ஆளாகி நின்ற போது அல்லாஹ்தான் நீக்கக் கூடியவன்என்றே போதித்தார்கள். திருக்குர்ஆனும் பல இடங்களில் இதை மிகத் தெளிவாகவே கூறுகின்றன.
(2:272) (3:128) (6:17) (6:50) (6:66) (7:188) (10:106,107) (11:63) (28:56) (42:52) (49:9) (72:21,22)
ஆகிய வசனங்களை ஒருவர் சிந்தித்தால் இந்த ஸலவாத்துன்னாரிய்யாவின் கருத்தை தவறு என்று புரிந்து கொள்வார். கருத்தின் அடிப்படையிலும் இந்த ஸலவாத்துன்னானரிய்யா தவறாக உள்ளது என்பதால் இதை ஓதுவது கூடாது என்று உணரலாம்.
நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எதை ஸலவாத் என்று சொல்லித் தந்தார்களோ அதை ஓதி நன்மை அடைவோமாக! பிற்காலத்தில் உருவாக்கப்பட்ட உலா வருகின்ற பித்அத்தான ஸலவாத்களை விட்டொழிப்போமாக!
முகம்மது அலி, M.A.

ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் !

சில நேரங்களில் சில மனிதர்கள் !

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்தச் சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். “உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்”.

அந்த நபர் கண்களை மெதுவாகத் திறந்தார். “ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்… மன்னிக்கவும்”

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும் அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனத்தில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீஃபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது.

இன்னொரு நிகழ்ச்சி கராத்தே, குங்ஃபூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்துவிட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவனுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமாதலால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கிச் சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார்.

“உனக்கு என்ன பிரச்சனை?”

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது அவர் தோளில் சாய்ந்துகொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தம் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பதால் எந்தப் பிரச்சினையும் வளருமே தவிர தீராது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணியிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும். அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார் “அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிட்ம போயிருக்காவிட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலைபோன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னால் மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்தரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும் கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை”.

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்தச் சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும்போது புரிந்துகொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள்கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்துவிடும்.


நன்றி : நம்பிக்கை, மலேஷியா

சனி, 11 பிப்ரவரி, 2012

நீதி தேவதை கண்ணைத் திறந்தது!


நீதி தேவதை கண்ணைத் திறந்தது!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 இன் படி இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவரும் சட்டத்தின் முன் சமமானவராவார்.
பிரிவு 15 இன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைக் கொண்டோ அல்லது குடிமகன் எவருக்கும் அரசு வேற்றுமை பாராட்டுதல் கூடாது.

நீதி தேவதை இரண்டு கண்களையும்  கட்டிக்கொண்டு ஒரு தராசினை கையில் ஏந்தி, தராசுத் 
தட்டுகள் சம நிலை இருக்கும் விதமான சிலைகள், படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு தராசுத் தட்டின் அடியில்  எடையினக்  கூட்ட மாக்னெடிக் கல்லை வைத்து ஒட்டி 
இருப்பதினை எங்கே அந்த நீதி தேவதையின் சிலை அறியப் போகிறது என்று 1992 ஆம் ஆண்டு 
அயோத்தியில் பாரம்பரியமிக்க இஸ்லாமியர் வழிப் பாட்டுத் தளம் இடிக்கப் பட்டது. அப்போது 
மத்தியில் ஆட்சியில் இருந்த மௌன சாமியார் என்று புகழப் பட்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் 
ஆட்சியையும், உ.பி. மாநிலத்தில் இப்போது தன்னை பிற்பட்ட மக்களின் தலைவன் என்று சொல்லிகொள்ளும் 
கல்யானசிங் தலைமையிலான ப.ஜ.க. ஆட்சியையும் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
மசூதி இடிக்கப் பட்டது ஒரு நிகழ்ச்சியாக ஒரு சில படித்த பெரியவர்களுக்கு தோணலாம். ஏனென்றால் அவர்கள் 
தங்களுடைய முடிவினை அறிவிக்கும்போது நிஜக் கண்ணை மறைக்கும் கலர் கண்ணாடி அணிந்து இருந்திருப்பார்கள் 
போலும். கண்ணாடி இல்லாமல் அறிவித்து இருந்தால்  அவர்களின் உண்மை சொரூரம் வெளிப் பட்டிருக்கும் அல்லவா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பாரம்பரியமிக்க மஸ்ஜித் இடிக்கப் பட்டுவிட்டதே என்று ஆதங்கப் 
படும்போது ஒரு சில உயர்ந்த மனிதர்கள் மட்டும் அது ஒரு நிகழ்வுதான் என்று சொல்லும்போது விந்தையாக 
உங்களுக்குத் தெரியவில்லையா? இப்படிக்கும் அவர்கள் சட்ட மேதைகள் என்று எண்ணும்போது வேதனையாக ஒருபுறம்
இருக்கத் தான் செய்கிறது. அப்படி இடிக்கப் பட்ட மஸ்ஜித் இடம் மனித கலாசாரத்தின் இழிநிலை செயலினை எடுத்துக் காட்டும் இடமாகத் தான் உலகிற்கு தெரிகிறது. ஆனால் ஏனோ சில உயர்ந்த மனிதர்களுக்குத் தெரியவில்லை.
பண்பாட்டினை விட்டுவிட்டு அரசியல் சட்டத்திற்கு உற்பட்டதா மஸ்ஜித் இடிப்பது என்றாவது அவர்கள் ஆராய வேண்டாமா?
20 ஆண்டு காலம் இந்திய நாட்டின் 20 சதவீத மக்கள் மஸ்ஜித் திரும்பவும் அதே இடத்தில் கட்டப்பட 
வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத் தானே இருக்கின்றது என்று எண்ணும்போது வேதனையாக இல்லையா?
ஆனால் குஜராத் மாநில உயர் நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மதிப்பு மிகு பாஸ்கர் பட்டச்சார்யா மற்றும் பர்டிவாளா 
ஆகியோர் 8.2.2012 அன்று சரித்திரம் வாய்ந்த நீதியினை இந்த நாட்டில் சத்தியம் அழிய வில்லை என்று காட்டியும், நீதி தேவதை எதற்கும் மயங்காமல், இன்னும் உயிருடன் தான் உள்ளாள் என்றும், அரசிய சட்டத்தினை நிலை நிறுத்தியும் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். அது என்ன தீர்ப்பு?
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் ஒரு ரயில் தீப்பற்றி எரிகிறது. அதில் சிலர் மாண்டு விடுகிறார்கள். அதற்கு காரணம்
இஸ்லாமியர் என்று காரணம் காட்டி முஸ்லிம்களை மனித வேட்டையாடி விளையாடி 1200 பேர்களுக்கு மேல் கொல்லப் பட்டும், பல தொழில் நிறுவனங்கள்  கொளுத்தப் பட்டும், வீடுகள் இடிக்கப் பட்டும்  , பல பள்ளிவாசல்கள், தர்காக்கள் தரை மட்டமாக்கவும் பட்டன.
அங்கே பி.ஜே.பி. தலைமயிலான ஆட்சி அப்போதும் இப்போதும் மத்தியில் பி,ஜே, பியும் ஆட்சி செய்தன.
அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட 'தான் அப்போது கண்ணீர் விட்டு அழுததாக' தனது கைஎழாத தனத்தினை ஓய்வுக்குப் பின் நிருபர்களிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னன. 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்று சொல்லும் பழமொழி போல.
ஆனால் நீதி இந்திய திரு நாட்டில் இன்னும் செத்து விடவில்லை என்பது போல குஜராத் உயர் நீதி மன்ற இரு அமர்வு நீதிபதிகளும், கோத்ர ரயில் விபத்துக்குப்பின் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத் அரசு தன் கடமையினை சரிவர செய்ய வில்லை வென்றும், அவ்வாறு செய்யாததினால் பல வழிப் பாட்டு தளங்கள் இடிக்கப் பட்டது என்றும், அப்படி இடிக்கப் பட்ட வழிப் பாட்டுத் தளங்களை மறுபடியும் சீரமைக்கும் கடமை அரசைச் சார்ந்தது என்றும், அப்படி சீரமைக்க 26  மாவட்ட நீதிபதிகளும் கணகெடுத்து  நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையினை வழங்கியுள்ளார்கள்.
   
தற்போது குஜராத் நீதி மன்றம் வழங்கி உள்ள தீர்ப்புப் போன்று தான் அயோத்தி பள்ளிவாசல் இடித்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய திரு நாட்டின் குடிமக்களான இருபது சதவீத முஸ்லிம்களும்  ஏக்கத்துடன் உச்ச நீதி மன்றத்தினை எதிர் நோக்கி உள்ளார்கள்.
குஜராத் நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பு
சொல்லியிருப்பார்களேயானால்    அந்தச் சட்டம் எப்படி அயோத்தி பள்ளிவாசலுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதி மன்றத்தில் சமுதாய இயக்கங்கள் வாதிட வேண்டும்  . அரசியல் சட்டம் பிரிவு 15 இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தினை கடைப் பிடிக்கவும், பள்ளியில் தொழவும் உரிமை உள்ளது. அதனை பாது காப்பது அரசின் கடமையல்லவா? அந்த அரசியல் சட்டப் படி அரசு செயல் படுகிறதா என்று கண்காணிப்பது நீதி மன்றங்களின் செயலல்லவா? அப்படி செயல் படவில்லைஎன்றால் குஜராத்தில் நீதி மன்றம் நீதியினை நிலை நாட்டியது போல உச்ச மன்றமும் நிலை நாட்டி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆணை வழங்க வேண்டும், அதற்கு சமுதாய இயக்கங்கள் குரலும் எழுப்பிக் கொண்டே இருந்து விடாது, சட்டப் பூர்வமான கருத்துக்களை உச்ச நீதி மன்றம் முன் எடுத்து வைக்க வேண்டும் என்றால்  சரியாகுமா?