ஞாயிறு, 26 பிப்ரவரி, 2012

சில நேரங்களில் சில மனிதர்கள் !

சில நேரங்களில் சில மனிதர்கள் !

நியூயார்க் நகரத்தின் சுரங்கப்பாதை ஒன்றில் பிரபல எழுத்தாளர் ஒருவர் ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில் அமைதியாக அமர்ந்திருந்தார். ஆட்கள் அதிகமில்லாத அந்த இடத்தில் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவியது. சிலர் கண்களை மூடி அமர்ந்திருந்தார்கள். சிலர் பத்திரிகைகள் படித்தபடி அமர்ந்திருந்தார்கள். திடீரென்று அங்கு ஒருவர் தன் இரண்டு குழந்தைகளுடன் வந்தார். அவர் அந்த எழுத்தாளர் அருகே கண்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தார். அந்தச் சிறுவர்கள் இருவரும் ஆறு வயதைத் தாண்டாதவர்கள். அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்த அமைதி காணாமல் போயிற்று. குழந்தைகள் சத்தம் போட்டு விளையாட ஆரம்பித்து, பின்னர் சண்டையிட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பொருட்களை எடுத்து வீசிக்கொள்ள ஆரம்பித்தனர். அந்த தந்தையோ அந்தச் சிறுவர்களைக் கண்டிப்பதாகத் தெரியவில்லை. கண்களைத் திறக்காமல் அப்படியே அமர்ந்திருந்தார்.

அங்கு அமர்ந்திருந்த மற்றவர்கள் எரிச்சலுடன் அவரைப் பார்த்ததை அவர் அறியவில்லை. அந்த எழுத்தாளரோ தன்னம்பிக்கை, பொறுமை பற்றியெல்லாம் நிறைய எழுதிக் குவித்த எழுத்தாளர். அவரே பொறுத்து பொறுத்துப் பார்த்து ஒரு கட்டத்தில் பொறுமை இழந்து தன்னருகே கண்ணை மூடிக் கொண்டு அமர்ந்திருந்த அந்த நபரிடம் சொன்னார். “உங்கள் பிள்ளைகள் மற்றவர்களைத் தொந்தரவு செய்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் கட்டுப்படுத்துங்களேன்”.

அந்த நபர் கண்களை மெதுவாகத் திறந்தார். “ஆமாம் ஏதாவது செய்ய வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் தாய் இறந்து விட்டாள். அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அவள் உடலைத் தர சிறிது நேரம் ஆகும் என்றதால் அங்கிருக்க முடியாமல் இங்கு வந்தேன். இனி என்ன செய்வது என்று தெரியவில்லை என்று நினைக்கிறேன்… மன்னிக்கவும்”

அந்த எழுத்தாளர் அதுவரை அந்த நபர் மீதும் அந்தச் சிறுவர்கள் மீதும் கொண்டிருந்த கோபமெல்லாம் ஒரு கணத்தில் காற்றாய் பறந்து போயிற்று. அதற்குப் பதிலாக இரக்கமும் பச்சாதாபமும் மனத்தில் எழ அவர் மனைவி இறந்ததற்கு வருத்தம் தெரிவித்துவிட்டு ஏதாவது உதவி தேவையா என்று மனதாரக் கேட்டார்.

அந்த எழுத்தாளர் செயல்திறன் மிக்க மனிதர்களின் ஏழு பழக்கங்கள் என்ற புகழ்பெற்ற புத்தகத்தை எழுதிய ஸ்டீஃபன் ஆர். கோவே. இந்த நிகழ்ச்சியில் அந்த சிறுவர்களின் செயல்கள் மாறவில்லை. அந்த அமைதியான சூழ்நிலை மீண்டும் திரும்பவில்லை. ஆனால் அந்தக் குழந்தைகளும், அவர்கள் தகப்பனும் இருக்கும் சூழ்நிலை விளங்கியதும் அவர் மனநிலை முற்றிலுமாக மாறிவிட்டது.

இன்னொரு நிகழ்ச்சி கராத்தே, குங்ஃபூ கலைகளில் எல்லாம் மிகவும் தேர்ச்சி பெற்ற ஒரு வீரர் ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவர் தியான வகுப்புகளுக்கும் தொடர்ந்து செல்பவர். ரயிலில் நன்றாகக் குடித்துவிட்டு ஒருவன் ரயில் பயணிகள் ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு வம்பு செய்து சண்டையிட்டுக் கொண்டு இருந்தான். நேரமாக ஆக அவனுடைய வார்த்தைப் பிரயோகங்கள் மிக மோசமாகப் போய்க் கொண்டு இருந்தன. ஒருசிலர் திரும்பப் பேசினர். ஒருசிலர் முகம் சுளித்துக் கொண்டு வேறிடத்திற்குப் போய் அமர்ந்து கொண்டார்கள். நீண்ட பயணமாதலால் இதை நிறைய நேரம் பார்க்க நேர்ந்த கராத்தே வீரருக்கு கோபம் பொங்கி வந்தது. போய் இரண்டு தட்டு தட்ட வேண்டும் என்று நினைக்கையில் அத்தனை நேரம் அமைதி காத்த இன்னொரு பயணி அந்தக் குடிகாரனை நோக்கிச் சென்றதைக் கண்டு நிதானித்தார்.

அந்தப் பயணியும் தன்னைப் போலவே அடிக்கத் தான் செல்கிறார் என்று நினைத்த கராத்தே வீரருக்கு வியப்பு ஏற்படும் வண்ணம் அந்த நபர் குடிகாரன் அருகில் அமர்ந்தார். கனிவுடன் அவனிடம் கேட்டார்.

“உனக்கு என்ன பிரச்சனை?”

அந்தக் குடிகாரன் அந்தக் கேள்வியை எதிர்பார்க்கவில்லை போலத் தெரிந்தது. திகைத்துப் போய் அவரை ஒரு நிமிடம் ஒன்றும் சொல்லாமல் பார்த்த அவன் கண்களில் நீர் திரண்டது அவர் தோளில் சாய்ந்துகொண்டு விம்மி அழ ஆரம்பித்தான். அழுகையினூடே தனக்குத் திடீரென்று வேலை போன செய்தியைச் சொன்னான். தம் சம்பாத்தியத்தை நம்பி வீட்டில் மனைவியும் இரண்டு குழந்தைகளும் இருப்பதைச் சொன்னான். அந்த முதலாளியின் இரக்கமற்ற குணத்தைச் சொன்னான். சொல்லி அழுது முடித்த பின் எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்டுக் கொண்டிருந்த அந்த நண்பர் குடிப்பதால் எந்தப் பிரச்சினையும் வளருமே தவிர தீராது என்று சொன்னார். முதலாளி மேல் இருந்த கோபத்தை சக பயணியிடம் காட்டுவது சரியல்ல என்று சொன்னார். குடிப்பதற்கு பதிலாக அடுத்த வேலை எங்கு கிடைக்கும். அதற்காக யாரை அணுகலாம் என்று யோசித்திருந்தால் ஒரு வழி கிடைத்திருக்கலாம் என்று சொன்னார்.

அவர் பேசப் பேச அந்தக் குடிகாரன் அடைந்த மாற்றத்தைக் கண்ட கராத்தே வீரர் அது தனக்குப் பெரிய படிப்பினையாக அமைந்தது என்று ஒரு கட்டுரையில் எழுதியதை நான் படித்தேன். அவர் எழுதியிருந்தார் “அந்த நபர் ஒரு நிமிடம் என்னை முந்திக் கொண்டு அந்தக் குடிகாரனிட்ம போயிருக்காவிட்டால் கண்டிப்பாக நன்றாக அவனை அடித்து காயப்படுத்தி இருப்பேன் என்பதில் சந்தேகமில்லை. முதலிலேயே வேலைபோன அவனுக்கும் அவன் குடும்பத்திற்கும் என்னால் மேலும் துக்கம் விளைந்திருக்கும். அவனுடைய செய்கைகளுக்குப் பின் உள்ள துக்கத்தை அந்த நபர் உணர்ந்திருக்க வேண்டும். அவருடைய கனிவான செய்கை அவன் புண்ணுக்கு மருந்தாக அமைந்தது. அவன் அமைதியடைந்தான். அவன் இறங்க வேண்டிய இடம் வரை அவனிடமிருந்து அதற்குப் பிறகு ஒரு சத்தமோ, தொந்தரவோ இருக்கவில்லை. அதைப் பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் அவன் மீதிருந்த எரிச்சலும் கோபமும் விலகியது என்பதை சொல்லத் தேவையில்லை”.

முதல் நிகழ்ச்சியில் இருக்கும் நியாயம் இரண்டாவது நிகழ்ச்சியில் இல்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அந்த இரண்டாவது நிகழ்ச்சியிலும் அந்த செயலுக்குப் பின்னால் ஒரு காரணம் இருப்பதாக உணர்ந்த ஒரு மனிதர் காட்டிய கனிவு எப்படி அந்தச் சூழ்நிலையை அடியோடு மாற்றியது என்பதைப் பாருங்கள்.

நமக்குத் தவறாகத் தோன்றும் பல செயல்களுக்குப் பின்னால் பல ஆழமான காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்கள் நம்மால் ஏற்றுக் கொள்ள முடிந்தவையாக இருக்கலாம். சில காரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவையாக இருக்கலாம். ஆனால் அந்தக் காரணங்களை அறியும்போது புரிந்துகொள்ளல் சாத்தியமாகிறது. மன்னித்தல் சுலபமாகிறது.

எப்போதும் ஒரே மாதிரி நடந்துகொள்ள மனிதன் எந்திரமல்ல. எந்திரங்கள்கூட பழுதாகும் போது சில நேரங்களில் சில மனிதர்கள் நம் எதிர்பார்ப்புக்கு எதிர்மாறாக நடந்து கொள்வது அதிசயமல்ல. அது போன்ற சமயங்களில் அவர்கள் மீது கோபம் கொள்வதற்குப் பதிலாக ஏதாவது காரணம் இருக்கலாம் என்ற சிந்தனை நமக்குள் எழுமானால் அதைப் பெரிதுபடுத்தாமல் நகர்கிற பக்குவம் நமக்கு வந்துவிடும்.


நன்றி : நம்பிக்கை, மலேஷியா

சனி, 11 பிப்ரவரி, 2012

நீதி தேவதை கண்ணைத் திறந்தது!


நீதி தேவதை கண்ணைத் திறந்தது!
(டாக்டர் ஏ.பீ.முகமது அலி, ஐ.பீ.எஸ்(ஓ)

1950 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 இன் படி இந்திய ஆட்சிப் பரப்பிற்குள் உள்ள எவரும் சட்டத்தின் முன் சமமானவராவார்.
பிரிவு 15 இன் படி சமயம், இனம், குலம், பாலினம், பிறப்பிடம் ஆகியவற்றைக் கொண்டோ அல்லது குடிமகன் எவருக்கும் அரசு வேற்றுமை பாராட்டுதல் கூடாது.

நீதி தேவதை இரண்டு கண்களையும்  கட்டிக்கொண்டு ஒரு தராசினை கையில் ஏந்தி, தராசுத் 
தட்டுகள் சம நிலை இருக்கும் விதமான சிலைகள், படங்களைப் பார்த்திருக்கின்றோம்.
ஆனால் ஒரு தராசுத் தட்டின் அடியில்  எடையினக்  கூட்ட மாக்னெடிக் கல்லை வைத்து ஒட்டி 
இருப்பதினை எங்கே அந்த நீதி தேவதையின் சிலை அறியப் போகிறது என்று 1992 ஆம் ஆண்டு 
அயோத்தியில் பாரம்பரியமிக்க இஸ்லாமியர் வழிப் பாட்டுத் தளம் இடிக்கப் பட்டது. அப்போது 
மத்தியில் ஆட்சியில் இருந்த மௌன சாமியார் என்று புகழப் பட்ட நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் 
ஆட்சியையும், உ.பி. மாநிலத்தில் இப்போது தன்னை பிற்பட்ட மக்களின் தலைவன் என்று சொல்லிகொள்ளும் 
கல்யானசிங் தலைமையிலான ப.ஜ.க. ஆட்சியையும் நடந்தது அனைவருக்கும் தெரிந்ததே.
மசூதி இடிக்கப் பட்டது ஒரு நிகழ்ச்சியாக ஒரு சில படித்த பெரியவர்களுக்கு தோணலாம். ஏனென்றால் அவர்கள் 
தங்களுடைய முடிவினை அறிவிக்கும்போது நிஜக் கண்ணை மறைக்கும் கலர் கண்ணாடி அணிந்து இருந்திருப்பார்கள் 
போலும். கண்ணாடி இல்லாமல் அறிவித்து இருந்தால்  அவர்களின் உண்மை சொரூரம் வெளிப் பட்டிருக்கும் அல்லவா?
உலகில் உள்ள மக்கள் அனைவரும் பாரம்பரியமிக்க மஸ்ஜித் இடிக்கப் பட்டுவிட்டதே என்று ஆதங்கப் 
படும்போது ஒரு சில உயர்ந்த மனிதர்கள் மட்டும் அது ஒரு நிகழ்வுதான் என்று சொல்லும்போது விந்தையாக 
உங்களுக்குத் தெரியவில்லையா? இப்படிக்கும் அவர்கள் சட்ட மேதைகள் என்று எண்ணும்போது வேதனையாக ஒருபுறம்
இருக்கத் தான் செய்கிறது. அப்படி இடிக்கப் பட்ட மஸ்ஜித் இடம் மனித கலாசாரத்தின் இழிநிலை செயலினை எடுத்துக் காட்டும் இடமாகத் தான் உலகிற்கு தெரிகிறது. ஆனால் ஏனோ சில உயர்ந்த மனிதர்களுக்குத் தெரியவில்லை.
பண்பாட்டினை விட்டுவிட்டு அரசியல் சட்டத்திற்கு உற்பட்டதா மஸ்ஜித் இடிப்பது என்றாவது அவர்கள் ஆராய வேண்டாமா?
20 ஆண்டு காலம் இந்திய நாட்டின் 20 சதவீத மக்கள் மஸ்ஜித் திரும்பவும் அதே இடத்தில் கட்டப்பட 
வேண்டும் என்ற கோரிக்கை செவிடன் காதில் ஊதிய சங்காகத் தானே இருக்கின்றது என்று எண்ணும்போது வேதனையாக இல்லையா?
ஆனால் குஜராத் மாநில உயர் நீதி மன்ற அமர்வு நீதிபதிகள் மதிப்பு மிகு பாஸ்கர் பட்டச்சார்யா மற்றும் பர்டிவாளா 
ஆகியோர் 8.2.2012 அன்று சரித்திரம் வாய்ந்த நீதியினை இந்த நாட்டில் சத்தியம் அழிய வில்லை என்று காட்டியும், நீதி தேவதை எதற்கும் மயங்காமல், இன்னும் உயிருடன் தான் உள்ளாள் என்றும், அரசிய சட்டத்தினை நிலை நிறுத்தியும் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள். அது என்ன தீர்ப்பு?
2002 ஆம் ஆண்டு கோத்ராவில் ஒரு ரயில் தீப்பற்றி எரிகிறது. அதில் சிலர் மாண்டு விடுகிறார்கள். அதற்கு காரணம்
இஸ்லாமியர் என்று காரணம் காட்டி முஸ்லிம்களை மனித வேட்டையாடி விளையாடி 1200 பேர்களுக்கு மேல் கொல்லப் பட்டும், பல தொழில் நிறுவனங்கள்  கொளுத்தப் பட்டும், வீடுகள் இடிக்கப் பட்டும்  , பல பள்ளிவாசல்கள், தர்காக்கள் தரை மட்டமாக்கவும் பட்டன.
அங்கே பி.ஜே.பி. தலைமயிலான ஆட்சி அப்போதும் இப்போதும் மத்தியில் பி,ஜே, பியும் ஆட்சி செய்தன.
அன்றைய ஜனாதிபதி கே.ஆர். நாராயணன் கூட 'தான் அப்போது கண்ணீர் விட்டு அழுததாக' தனது கைஎழாத தனத்தினை ஓய்வுக்குப் பின் நிருபர்களிடம் தெரிவித்ததாக ஊடகங்கள் சொன்னன. 'கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்' என்று சொல்லும் பழமொழி போல.
ஆனால் நீதி இந்திய திரு நாட்டில் இன்னும் செத்து விடவில்லை என்பது போல குஜராத் உயர் நீதி மன்ற இரு அமர்வு நீதிபதிகளும், கோத்ர ரயில் விபத்துக்குப்பின் ஏற்பட்ட கலவரத்தில் குஜராத் அரசு தன் கடமையினை சரிவர செய்ய வில்லை வென்றும், அவ்வாறு செய்யாததினால் பல வழிப் பாட்டு தளங்கள் இடிக்கப் பட்டது என்றும், அப்படி இடிக்கப் பட்ட வழிப் பாட்டுத் தளங்களை மறுபடியும் சீரமைக்கும் கடமை அரசைச் சார்ந்தது என்றும், அப்படி சீரமைக்க 26  மாவட்ட நீதிபதிகளும் கணகெடுத்து  நடவடிக்கையினை மேற்கொள்ள வேண்டும் என்ற ஆணையினை வழங்கியுள்ளார்கள்.
   
தற்போது குஜராத் நீதி மன்றம் வழங்கி உள்ள தீர்ப்புப் போன்று தான் அயோத்தி பள்ளிவாசல் இடித்த வழக்கிலும் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று இந்திய திரு நாட்டின் குடிமக்களான இருபது சதவீத முஸ்லிம்களும்  ஏக்கத்துடன் உச்ச நீதி மன்றத்தினை எதிர் நோக்கி உள்ளார்கள்.
குஜராத் நீதிபதிகள் சட்டத்தின் படி தீர்ப்பு
சொல்லியிருப்பார்களேயானால்    அந்தச் சட்டம் எப்படி அயோத்தி பள்ளிவாசலுக்குப் பொருந்தாது என்று உச்ச நீதி மன்றத்தில் சமுதாய இயக்கங்கள் வாதிட வேண்டும்  . அரசியல் சட்டம் பிரிவு 15 இன் படி முஸ்லிம்கள் தங்கள் மார்க்கத்தினை கடைப் பிடிக்கவும், பள்ளியில் தொழவும் உரிமை உள்ளது. அதனை பாது காப்பது அரசின் கடமையல்லவா? அந்த அரசியல் சட்டப் படி அரசு செயல் படுகிறதா என்று கண்காணிப்பது நீதி மன்றங்களின் செயலல்லவா? அப்படி செயல் படவில்லைஎன்றால் குஜராத்தில் நீதி மன்றம் நீதியினை நிலை நாட்டியது போல உச்ச மன்றமும் நிலை நாட்டி மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் ஆணை வழங்க வேண்டும், அதற்கு சமுதாய இயக்கங்கள் குரலும் எழுப்பிக் கொண்டே இருந்து விடாது, சட்டப் பூர்வமான கருத்துக்களை உச்ச நீதி மன்றம் முன் எடுத்து வைக்க வேண்டும் என்றால்  சரியாகுமா?